முலாம்பழம் சாகுபடி முறை mulam palam forming

0
1624

முலாம்பழம் சாகுபடி முறை

முலாம்பழம் சாகுபடி 

பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய லாபம் கொடுக்கும் பயிரான முலாம்பழம் சாகுபடியை பற்றி பார்போம்.

ஏற்ற பட்டம் :

முலாம்பழச் சாகுபடிக்கு செடிப்பருவத்தில் பனி தேவை. விளையும்போது பனி இருக்கக்கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது.

ஏற்ற மண் :

முலாம்பழத்திற்கு செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் சிறந்தவை ஆகும்.

நிலத்தை தயார் செய்யும் முறை :

சாகுபடி நிலத்தை மூன்று முதல் நான்கு முறை உழவு செய்து மண்ணை மிருதுவாக்க வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 6 டன் தொழு உரம் அல்லது மாட்டு எருவைக் கொட்டி களைத்து விட வேண்டும். கடைசியாக, ரோட்டோவேட்டர் மூலம் உழுது நிலத்தை சமப்படுத்திக் கொண்டு வசதிக்கேற்ப பாசன வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும்.

முலாம்பழம் சாகுபடி முறை mulam palam
முலாம்பழம் சாகுபடி முறை mulam palam

விதை அளவு மற்றும் நடவு செய்யும் முறை :

ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 கிராம் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இரண்டு அடி, செடிக்குச்செடி அரை அடி இடைவெளியில் கைகளால் குழி தோண்டி நீர் பாய்த்து மாலை நேரத்தில் நடவு செய்ய வேண்டும். பிறகு ஈரப்பதத்தை பொறுத்து பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடுதல் :

விதைத்த 10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

பிறகு 25-ம் நாளில் கொடி படர ஆரம்பித்து, 30-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசல் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஏழு டேங்குகள் தேவைப்படும்.

தலா ஒரு கிலோ வீதம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயுடன், 100 கிராம் லவங்கம் பட்டையை அரைத்து கலந்து நான்கு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ புகையிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் 40-ம் நாளில் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஆறு டேங்குகள் தேவைப்படும்.

READ HERE  காளான் வளர்ப்பு முறை (Kalan Valarpu) Grow Mushroom Easily in Home

பூச்சி தாக்குதல் :

நடவு செய்த 6-ம் நாளில் விதைகள் முளைத்து, இரண்டு இலைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில், ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஒரு ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும்.

15 முதல் 20-ம் நாளுக்குள் தலா ஒரு கிலோ வீதம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும், ஏக்கருக்கு பத்து டேங்குகள் தேவைப்படும்.

அறுவடை :

முலாம்பழத்தின் வயது 65 முதல் 75 நாட்கள். 45 முதல் 55 நாட்களில் காய்கள் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ அளவுக்கு வந்துவிடும். 60-ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். அடுத்து ஒரு வார இடைவெளியில் இரண்டு அறுவடைகள் செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக 9 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

முலாம் பழம் நன்மைகள்

கண்பார்வை

முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

உடல் குளிர்ச்சி

கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய உப்புகள் இழப்பு ஏற்படுகிறது. கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.

READ HERE  போன்சாய் வளர்ப்பு Horticulture LandScaping Bonsai
முலாம் பழம் நன்மைகள்
முலாம் பழம் நன்மைகள்

சிறுநீரகம்

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள முலாம் பழங்களை சர்க்கரை சேர்த்து அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.

ரத்த ஓட்டம்

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் முலாம் பழங்களை சாப்பிடுவதாலும் அல்லது முலாம் பழ சாறு அருந்துவதாலும் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

மலச்சிக்கல்

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

ஊட்டச்சத்து

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இவை அனைத்தும் அவ்வப்போது முலாம் பழங்கள் சாப்பிடுவதால் நாம் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here