பட்டுப்புழு வளர்ப்பு Pattu Puzhu Valarpu
பட்டுபுழு வளர்ப்பு:
விவசாயம் சார்ந்த சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பட்டுபுழு வளர்ப்பு என்பது ஒரு மிகச்சிறந்த தொழிலாகும். அவற்றை வளர்த்து எவ்வாறு லாபம் ஈட்டலாம் என்பதை பற்றி காண்போம்.
மல்பெரி உற்பத்தி :
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி நன்றாக உழவு செய்ய வேண்டும்.
3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரத்து 800 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.
களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் நன்கு வளர்ந்துவிடும்.
இந்தச் செடிகளில் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம்.
25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம்.
நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பட்டுப்புழு :
பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும்.
100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 100 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.
8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்காக வடிவமைக்கப்பட்ட புழு வளர்ப்பு தாங்கிகளில் விட வேண்டும்.
மேலும் கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் நெட்ரிக்கா எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும்.
இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும்.
வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும்.
புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் அறுவடை தருணம்.
விற்பனை :
மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய தமிழகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் தருமபுரி, ஓசூர், சேலம், கோவை, வாணியம்பாடி, தென்காசி ஆகிய இடங்களில் பட்டு விற்பனை மையம் உள்ளது.
இம்மையங்களில் தினசரி விவசாயிகள் தங்களது பட்டுக்கூடுகளை விற்பனை செய்து கொள்ளலாம். பட்டுக்கூடுகளுக்கான சராசரி விலை, பட்டு நூல் விலை நிர்ணயத்திற்கேற்ப முடிவு செய்யப்படுகிறது. பட்டு நூல் விலை தினசரி காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அண்ணா பட்டு பரிமாற்றகத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.