இறால் வளர்ப்பு Prawn Farming

0
2296

இறால் வளர்ப்பு Prawn Farming

இறால் வளர்ப்பு:

இறால் பொதுவாக நன்னீரிலும் உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் திகல்கிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. இத்தகைய சிறப்பு மற்றும் லாபம் மிக்க இறால் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.

இடத்தை தயார்படுத்துதல் :

இறால் வளர்க்கும் குளங்களை நன்றாக உலரவைத்து இரண்டு முறை உழுவு செய்ய வேண்டும். நிலத்தின் மண்ணை சோதனை செய்து பிறகு தேவையான தாது உப்புகளை இட்டு பின்னர் இறுதி உழவு செய்ய வேண்டும்.

குளத்தைச் சுற்றிலும் நண்டு வலை மற்றும் பறவை விரட்டும் வலைகளை அமைக்க வேண்டும். மேலும் குளங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே சென்று வருவதற்கு ஒரே ஒரு நுழைவுவாயில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குளத்திற்கு நீரேற்றம் செய்ய உதவும் நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றிலும் நண்டு வலை மற்றும் பறவை விரட்டும் வலைகளை அமைக்க வேண்டும்.

அதன் பின்னர் முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட மோட்டார் பம்புகள் கொண்டு மூன்று நிலைகளில் நீரை வடிகட்டி குளங்களுக்கு நீர் நிரப்ப வேண்டும். நீர் ஏற்றி மூன்று நாட்கள் கழித்து மாலை வேளையில் குளத்தில் உள்ள நீரை முறையாக கிருமிநீக்கம் செய்ய வேண்டும். பின்னர் மூன்று நாட்கள் கழித்து நீரில் பச்சையம் நிலைப்பட ஏதுவாக, உரங்கள் கொடுக்க தொடங்க வேண்டும்.

இந்நிலையில் பச்சையம் நிலைப்பட ஏதுவாக குளங்களில் காற்றூட்டிகள் அமைக்க வேண்டும். பின்னர் பச்சையம் குளத்தில் நிலைப்பட்டவுடன் கடலோர நீர்வாழ் ஒழுங்கு முறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து நோய் அற்ற இறால் குஞ்சுகளை வாங்க வேண்டும்.

முன்னதாக நம்முடைய தண்ணீரை அவர்களிடம் கொடுத்து பரிசோதிக்க வேண்டும். அவர்கள் அந்த நீரில் பி.ஹெச் மற்றும் சன்லிட்டி ஆகியவற்றைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு இறால் குஞ்சுகளை தயார் செய்து கொடுப்பார்கள்.

READ HERE  மரவள்ளி கிழங்கு சாகுபடி Maravalli Kilangu

முதலில் நூறு குஞ்சுகளை மட்டும் வாங்கிவந்து குட்டையில் விடவேண்டும். 48 மணி நேரம் அதனைக் கண்காணித்து எல்லாம் உயிரோடு இருந்தால் திரும்பவும் சென்று நமக்கான இறால் குஞ்சுகளை வாங்க வேண்டும்.

இறால் குஞ்சுகள் விட்டவுடன் ஒரு மாதத்திற்கு அதில் குஞ்சுகள் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் குஞ்சுகள் விடலாம். ஒரு நாளைக்கு இரண்டு வேளை தீவனங்கள் கொடுக்க வேண்டும்.

இறாலானது நான்கு சமயங்களில் தன்னுடைய தோலை உரித்துக்கொள்ளும். இப்படி தோல் உரிக்க உரிக்கத்தான் அது பெரிதாக வளர்ச்சியடையும்.

இறால் குஞ்சுகளுக்கு என மூன்று அளவில் தீவனங்கள் உள்ளன. இதில் புரோட்டீன் அதிகம் உள்ளன. வாரம் ஒரு முறை குஞ்சுகளை பிடித்து அதன் அளவுக்கு ஏற்றவாறு தீவனம் கொடுக்க வேண்டும். இறால் வளர்ப்பு என்பது மொத்தம் 90 நாட்கள் தான்.

செயற்கை ஆக்சிஜன் :

நீரில் செயற்கையாக ஆக்சிஜனை உண்டாக்க வேண்டும் இது மிக முக்கியமானது. நாம் கொடுக்கும் தீவனம் அனைத்தையும் இறால் எடுத்துக்கொள்ளாது. அதாவது தோல் உரிக்கும் நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளாது. அந்த சமயத்தில் ஆறு மணி நேரம் நீருக்கு அடியில் அமர்ந்துவிடும்.

அப்போது இடும் தீவனங்கள் அம்மோனியாவாக மாறிவிடும். இது இறாலுக்கு எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும். தாவர நுண்ணுயிரிகள் அழிந்தவுடன் செயற்கை முறையில் ஆக்சிஜனை உருவாக்க வேண்டும்.

அறுவடை :

ஒரு ஏக்கரில் இரண்டு லட்சம் இறால் குஞ்சுகள் விடும்போது எப்படியும் 20 சதவீத இறால் குஞ்சுகள் இறந்துவிடும். மீதமுள்ள 1 லட்சத்தது 60000 இறால் குஞ்சுகள் மூலம் 90 நாளில் மூன்றரை டன் வரை இறால் கிடைக்கும்.

எனினும் இறால் வளர்ப்புப் பயிற்சியில் கலந்து கொண்டு அதில் உள்ள தொழில்நுட்பங்களை நேரடியாக பார்த்து கற்றுக் கொண்டு அதன் பிறகு இறால் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here